கீதைப் பதிவு-அத்தியாயம் -7 ஞானவிக்ஞான யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடத்து அடைக்கலம் புகுந்தவனாய், ஐயமற என்னை முற்றும் அறிவது எங்ஙனமென்று சொல்லக் கேளாய்(1)
விக்ஞானத்த்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்கிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை.(2)
ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மன நிறைவின் பொருட்டு முயலுகிறான்.முயலுகின்ற பெரு வாய்ப்பு உள்ளோர்களில் யாரொ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.(3)
நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாகஎன் பிரகிருதி பிரிவு பட்டிருக்கிறது.(4)
இது என்னுடைய கீழான பிரகிருதி.இதினின்று வேறானதும், உயிர் ஆவதுமாகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. தோள்வலியோய் இந்த ஜகத் ஆனது இதனால் தாங்கப் படுகிறது.(5)
உயிர் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து உண்டானவை என்று அறிவாயாக. நான் ஜகத் முழுவதன் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்(6)
தனஞ்செயா, எனக்கு மேலானது வேறு எதுவும் இல்லை.நூலிலே மணிகள் போன்று இவை யாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன.(7)
குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திர சூரியர் களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், வானில் ஓசையாகவும், மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கிறேன்.(8)
மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9)
பார்த்தா, எல்லா உயிர்களின் நிலைபேறுடைய வித்து என்று என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும் தேஜஸ்விகளுடைய தேஜஸ் ஆகவுன் நான் இருக்கிறேன்.(10)
பரதத் தலைவா,பலவான்களிடத்துக் காமமும்(புலப்படாத பொருள் களைப் பெற விரும்புதல்) ராகமும் (புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல்) நீங்கப் பெற்ற சாமர்த்தியமாக நான் இருக்கிறேன்.உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.(11)
சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடத்துத் தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை, அவைகள் என்னைச் சார்ந்து இருக்கின்றன.(12)
இந்த மூன்று குணங்களால் ஆகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிகிறதில்லை.(13)
குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவ மாயையானது உண்மையில் தாண்ட முடியாதது.யார் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகின்றனர்.(14)
பாபச் செயலை உடையவர், மூடர், மக்களுள் கடைத் தரமானவர், மாயையினால் ஞானம் அபகரிக்கப் பட்டவர், அசுர இயல்பைப் பற்றி நிற்பவர்-இத்தகையோர் என்னைப் போற்றுகின்றதில்லை.(15)
பரதகுலப் பெருமகனாகிய அர்ஜுனா, துன்புற்றவன் , ஞான வேட்கை உடையவன் பொருளின்பம் தேடுபவன், ஞானி ஆகநான்கு விதமான அறச் செயலாளர்கள் என்னைப் போற்றுகின்றனர்.(16)
அவர்களுள் இடையறா யோகம் பூண்டு மாறாத பக்தி பண்ணும் ஞானி மேலானவன்.ஏனென்றால் நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்.(17)
இவர்கள் எல்லாரும் நல்லார்களே.ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைப் பிடித்திருக்கிறான்.(!8)
பல பிறவிகளுக்குப் பிறகே “யாவும் வசுதேவ சொரூபம்”என்று ஞானி வணங்கி என்னை வந்தடைகிறான்.அத்தகைய மஹாத்மா கிடைப்பதற் கரியவன். (19)
பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு , அது அதற்கு ஏற்ற நியமத்தை கையாண்டு பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர்.(20)
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன்(21)
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதனின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.(22)
ஆனால் அற்ப அறியாதவர்களாகிய அவர்கள் அடையும் பயன் அல்பமானதாகிறது. தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர்.(23)
என்னுடைய அழிவற்ற , ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(24)
யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான், எல்லோருடைய அறிவுக்கும் எட்டுகிறதில்லை.பிறவாத, அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை.(25)
அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய உயிர்களை எல்லாம் நான் அறிவேன்.ஆனால் என்னை யாரும் அறியார்.(26)
பகைவரை வாட்டுகின்ற பாரதா,விருப்பு வெறுப்பினின்று உண்டாகும் துவந்துவ மோகத்தால்(இருமை மயக்கத்தால்) பிறக்கும்போதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன(27)
ஆனால் புண்ணிய கருமங்களை உடைய எந்த ஜனங்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ, துவந்த மோகத்தில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகின்றனர்(28)
மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த பிரம்மத்தையும் அத்யாத்மம்(ஆத்ம சொரூபம்) முழுவதையும் , கர்மம் அனைத்தையும் அறிகின்றனர்.(29)
யார் என்னை அதிபூதத்துடனும், அதிதெய்வத்துடனும், அதி யக்ஞத்துடனும் கூடினவனாக அறிகிறார்களோ,யோகத்திலே நிலை நின்ற மனதை உடைய அவர்கள் சாகும் தறுவாயிலும் என்னை அறிகின்றனர்.
ஞான விக்ஞான யோகம் நிறைவு.
G.M.Balasubramaniam Posts
No comments:
Post a Comment