Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம்

 

கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம்

அர்ஜுனன் சொன்னது

ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம் கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1)

முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும் நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2)

ஸ்ரீபகவான் சொன்னது

பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான யோகம் என்றும் அதை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கர்ம யோகமென்றும் இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப் பட்டிருக்கின்றன. (3)

புருஷன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதீதத்தை அடைவதில்லை.வெறும் சன்னியாசத்தால் அவன் நிறை நிலையைப் பெறுவதுமில்லை.(4)

யாரும் ஒரு கணப் பொழுதேனும் செயலாற்றாதிருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப் படுகிறது(5)

கர்மேந்திரியங்களை அடக்கி , இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கமுடையவன் என்று பகரப் படுகிறான்(6)

அர்ஜுனா ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவனே(7)

நித்திய கர்மத்தை நீ செய். செயல் இன்மையைவிடச் செயல் சிறந்தது செயல் இலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது.(8)

யக்ஞ கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று.(9)

சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து “இதனால் விருத்தியடையுங்கள், இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும் என்றார்(10)

இதனால் தேவர்ளைப் பேணுங்கள்.தேவர்கள் உங்களைப் பேணட்டும் பரஸ்பரம் பேணி பெருநன்மை எய்துவீர்.(11)

யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை நல்குவார்கள அங்ஙனம் அவர்களால் கொடுக்கப் பெற்று அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடன்.(12)

யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கின்றனர்(13)

உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன.மழையினின்று உணவு உருப்படுகிறது.யக்ஞத்திலிருந்து மழை வருகிறது.யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம்(14)

கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக.வேதம் பரமாத்மாவிடமிருந்து வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.(15)

இகத்தில் இங்ஙனம் இயக்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின் பற்றாதவன்,ஓ பார்த்தா,பாபவாழ்க்கை உடையோனாய், புலன்களில் பொருந்தினவனாய், வீணே  வாழ்கிறான்.(16)

ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.(17)

அவனுக்குக் கர்மம்செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் இல்லை.ஏதாவது பொருளைநாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கு இல்லை.(18)

ஆகையால் யாண்டும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுக. ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெரு நிலையைப் பெறுகிறான்.(19)

ஜனகர் முதலானவர்கள் கர்மத்தாலேயே முக்தி அடைந்தார்கள்.உலகத்தை நல் வழியில் நடத்துதலை நன்குணர்ந்தாவது கர்மஞ் செய்யக் கடமைப் பட்டிரு.(20)

மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின் பற்றுகின்றனர்.அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.(21)

பார்த்தா, மூவுலகிலும் எனக்குக் கடமையேதும் கிடையாது. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை.ஆயினும் நான் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன்.(22)

அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில் மனிதர்களென் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.(23)

நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக்கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.(24)

பார்த்தா, பற்றுள்ளவராய்ப் பாமரர் கர்மம் செய்வதுபோல பண்டிதர் பற்றில்லாதாராய்ப் பாரினில்  பெருநெறி புகட்டுதற் பொருட்டுக் கர்மம் செய்ய வேண்டும்.(25)

ஞானியானவன் கர்மப் பற்றுள்ள அக்ஞானிகளிடத்து மனக்கலக்கத்தை உண்டு பண்ணலாகாது.எல்லா கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.(26)

பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப் படுகின்றன.அகங்காரத்தால் மோகமடைந்தவன்  ”நான் கர்த்தா என்று நினைக்கிறான்.(27)

ஆனால் பெருந்தோளுடையோய், குண கர்மத்தின் தத்துவ ஞானியோ, குணங்கள் குணங்களில் பிரவ்ர்த்திக்கின்றன என்று பற்று வைப்பதில்லை.(28)

பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில் பற்று வைக்கின்ற மந்த புத்தியினரைத் தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது(29)

கர்மங்களை எல்லாம் எனக்கர்ப்பணித்து, சித்தத்தை சைதன்யத்தில் வைத்து,ஆசையையும் மமகாரத்தையும் அகற்றி, மனக் கொதிப்பின்றிப் போர் புரிவாயாக.(30)

எனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும் பொறாமைப் படாமலும் பின் பற்றுகிறார்களோ அவர்கள் கூட வினையினின்று விடுபடுகிறார்கள்(31)

எனது இக்கொள்கையை மற்று யார் இகழ்ந்து பின் பற்றுவதில்லையோ, எவ்வித ஞானமும் விவேகமும் இல்லாத அம்மூடர்களைக் கெட்டுப் போனவர்களென்று அறிக.(32)

ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி நடக்கிறான்.உயிர்கள் அவ்வவற்றின் குணங்களைப்   பின்பற்றுகின்றன.தடை செய்வதால் ஆவதென்ன.?(33)

இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பு உண்டு.அவைகளுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்குச் சத்துருக்கள்.(34)

நன்கு இயற்றப்படும் பரதர்மத்தைவிட, குணமில்லாத் தன் தர்மம் மேலானது. ஸ்வதர்மத்தில் இறப்பது மேல்.பிறர் தர்மம் பயம் தருவதாம்.(35)

அர்ஜுனன் சொன்னது

விருஷ்ணி குலத்தோய் இப்புருஷன் இச்சிக்காதிருந்தும் பலவந்தமாய் ஏவப்பட்டவனாய், எதனால் தள்ளுண்டு பாபம் செய்கிறான்.?(36)

ஸ்ரீபகவான் சொன்னது.

ரஜோ குணத்து உதித்த, இக்காமம்தான், இக்குரோதம்தான் எதையும் உண்ணவல்லது.;பெரும் பாபமுடையது; ஈண்டு இதை எதிரியென அறிக.(37)

நெருப்பானது புகையினாலும் கண்ணாடி அழுக்கினாலும் , சிசு கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினால் மூடப் பட்டிருக்கிறது(38)

குந்தியின் மைந்தா,ஞானியின் நித்திய சத்துருவும், காம வடிவெடுத்ததும் ,நிரப்ப முடியாததும், போதும் எனாததும் ஆகிய இந்த ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது,(39)

இந்திரியங்களும் மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப் படுகிறது.இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.(40)

ஆகையால் பரதவீர ,நீ முதலில் இந்திரியங்களை அடக்கி ஞான விக்ஞானத்தை அழிக்கின்ற பாப வடிவமான ஆசையை அறவே ஒழித்துவிடு.(41)

இந்திரியங்கள் (உடலினும்) பெரிதாம். அவற்றினும் மேலானது மனம். புத்தியோ மனத்தைவிடப் பெரியது.புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா.(42)

மஹாபாகுவே, இங்ஙனம் புத்தியிலும் மேலான ஆத்மாவால் ஆத்மாவை அடக்கி. வெல்ல முடியாததும் ஆசை வடிவு உடையதுமாகிய சத்துருவை அழைத்து விடுவாயாக.(43)

                   கர்ம யோகம் நிறைவு.    


G.M.Balasubramaniam Posts 

கீதைப் பதிவு அத்தியாயம் –2 ஸாங்கிய யோகம்

 

கீதைப் பதிவு அத்தியாயம் –2 ஸாங்கிய யோகம்


ஸஞ்ஜயன் சொன்னது

அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை குறைந்து  துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு ,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1)

அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்த்து,?(2)

பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப் பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3)

அர்ஜுனன் சொன்னது

பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில் எதிர்த்துப் பாணங்களால் அடிப்பேன் (4)

மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல், பிக்ஷை ஏற்று உண்பதும் சாலச் சிற்ந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும் போகத்தையும் இம்மையிலேயே அனுபவிப்பவன் ஆவேன் (5)

நாம் இவர்களை ஜெயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜெயிப்பது இதில் நமக்கு எது மேலானது என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.(6)

சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப் பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன்.எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக இயம்பும்..நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.(7)

பூமியில் நிகரற்றதும் ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு,அதிபதியாயிருக்கப் பெறினும் , என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை(8)

ஸஞ்ஜயன் சொன்னது

பகைவனைப் பொசுக்கும் குடகேசனாகிய அர்ஜுனன், ஹிருஷிகேசனாகிய கோவிந்தனுக்கு  இங்ஙனம் இயம்பிப் “போர் புரியேன் என்று பேசாதிருந்துவிட்டான்(9)

திருதராஷ்டிரா, இரண்டு சேனைகளுக்குமிடையில் இன்னற்படுகிற அர்ஜுனனுக்கு இளமுறுவல் பூத்தவராய் ஹிருஷிகேசன் இவ்வார்த்தைகளை இயம்பினார்.(10)

ஸ்ரீபகவான் சொன்னது

துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயருறுகிறாய்.ஞானியரது நல்லுரையையும் நவில்கிறாய். இருப்பார்க்கோ இறந்தார்க்கோ புலம்பார் பண்டிதர்.(11)

முன்பு எப்பொழுதாவது நான் நீ இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாதிருந்ததில்லை. இக்காயங்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் போகமாட்டோம்.(12)

ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும் யௌவனமும் மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது.தீரன் அதன் பொருட்டு மயங்கான் (13)

குந்தியின் மைந்தா, பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர் வெப்பம் இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமையும் அவைகளின் இயல்பு.பாரதா அவைகளைப் பொறுத்துக்கொள்.(14)

புருஷ சிரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறாது,இன்பதுன்பங்களை ஒப்பாக உணர்கிறானோ அத்தீரனே சாகா நிலைக்குத் தகுந்தவனாகிறான்(15)

இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற் போவதுமில்லை.உண்மையை அறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும் (16)

உலகெலாம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக.அழியாப் பொருளை அழிக்க யாருக்கும் இயலாது.(17)

நித்தியமாய் நாசமற்றதாய் அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் உடலங்கள் யாவும் அழியும் தன்மையினவாம் ஆதலால் பார்த்தா போர் புரிக.! (18)

ஆத்மாவைக் கொலையாளி என்றும் கொலையுண்பானென்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆதமா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதும் இல்லை.(19)

இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று( இருந்து பிறகு இறந்து போவதன்று)இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது.காயம் கொல்லப்படுமிடத்து ஆத்மா கொல்லப் படுவது இல்லை(20)

பார்த்தா,இவ்வாத்மாவை அழியாதது,மாறாதது, பிறவாவது, குறையாததுஎன்று அறிபவன் யாரைக் கொல்வான், யாரைக்கொல்விப்பான்.?(21)

பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக் கொள்வது போன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புகுகிறது.(22)

ஆயுதங்கள் அதை வெட்ட மாட்டா, தீ அதை எரிக்காது, நீர் நனைக்காது, காற்றும் அதை உலர்த்தாது.(23)

இவ்வாத்மா வெட்டுண்ணான்,வேகான்,நனையான், உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய் நிலையாய் அசைவற்றவனாய் என்றும் இருப்பான்(24)

இவ்வாதமா பொறிகளுக்குத் தென்படாதவன், சிந்தனைக்கு எட்டாதவன்,மாறுபடாதவன் எனப்படுகிறான். ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துன்பத்தை அகற்று.(25)

ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறான் என்று எண்ணுவாயானால், அப்போதும் , பெருந்தோளுடையோய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது(26)

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் உறுதி எனின் விளக்க முடியாத விஷ்யத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது(27)

பாரதா உயிர்கள் துவக்கத்தில் தோன்றாமலும் , இடையில் தோன்றியும் , இறுதியில் தோன்றாமலும் இருக்கின்றன.இதைக் குறித்து வருந்துவானேன்(28)

இவ்வாத்மா வியப்புக்குரியது என்று விழிக்கிறான் ஒருவன் இது என்ன விந்தை என்று விள்ளுகிறான் வேறு ஒருவன்,ஆச்சரியம் என்று காது கொடுக்கிறான் இன்னொருவன், மற்றொருவன் இதைக் கேட்டும் அறிந்திலன்(29)

பாரதா,உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப் படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்(30)

ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது.அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை.(31)

பார்த்தா தற்செயலாய் நேர்ந்ததும் திறந்த சொர்க்க வாயில்போன்றதுமான இந்த யுத்தத்தை பாக்கியவான்களாகிய க்ஷத்திரியர்களே அடைகிறார்கள்.(32)

அற்ப்போர் ஆகிய இதனை ஆற்றாயேல்,அதனால் நீ ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்.(33)

மானுடர் உன்னை யாண்டும் இழிந்து பேசுவார்கள்.போற்றுதலுக்குரிய ஒருவன் தூற்றப்படுதல் இறப்பதிலும் இழிவே.(34)

பயத்தால் நீ போரினின்று பின் வாங்கினாயென்று மகாரதிகர்கள் எண்ணுவார்கள்.எவர்பால் நீ பெருமை பெற்றிருந்தாயோ அவர்பால் நீ சிறுமையுறுவாய்(35)

உன் பகைவர்களுன் திறமையைப் பழித்துப் பகரவொணாச் சுடு சொற்களைச் செப்புவார்கள். அதைவிடப் பெருந்துன்பம் யாது உளது.(36)

போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய்.வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய்.ஆகையால் கௌந்தேய.போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.(37)

இன்பம் துன்பம் லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமமாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.(38)

ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப் பட்டது.இனி பார்த்தா யோகத்தைப் பற்றிக் கேள். யோக புத்தியைப் பெறுவாயாகில் நீ கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.(39)

இதில் முயற்சி ஒன்றும் வீண்போதல் இல்லை.குற்றமொன்றும் வராது.இதைச் சிறிது பழகினும் பெரும் பயத்தினின்று இது காப்பாற்றும்.(40)

குருகுலத்துதித்தோய், இந்த யோகத்தில் உறுதி  கொண்டவனுக்குப் புத்தி ஒன்றேயாம்.உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பலகிளைகளை உடையனவும்  முடிவற்றவைகளுமாம்.(41)

வேதமொழியில் விருப்பமுடையவர்கள்,சுவர்க்கத்தை விளைவிக்கிற கருமத்துக்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பவர்கள்,கர்மம் நிறைந்தவர்கள், சுவர்க்கமே முடிவான பேறு என்பவர்கள்-இத்தகைய அவிவேகிகளுடைய புஷ்பாலங்காரமான வசனத்தைக் கேட்டு அறிவு கலங்கப் பெறுபவர்க்கும் போக ஐசுவரியத்தில் பற்று உடையவர்க்கும், உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை. அவர்களது புஷ்பாலங்காரமான சொற்கள் போக ஐசுவரியத்தைப் பெறுவதற்கான காமிய கரும விசேஷங்கள் நிறைந்தனவாயும்,புதிய பிறவிகளை உண்டு பண்ணுவனவாயும் இருக்கும்(42-44)

அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள், நீ இருமைகளினின்று விடுபட்டு எப்போதும் நடுவு நின்று, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக,(45)

எங்கும் நீர் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன் படுகிறவளவு ஞானத்தை உடைய பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன் படுகின்றன(46)

வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய் வினைப் பயனில் ஒரு போதும் உரிமை பாராட்டாதே.வினைப்பயன் விளைவிப்பவன் ஆகிவிடாதே.வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே. (47)

தனஞ்ஜெயா. யோகத்தில் நிலை பெற்று,பற்று அற்று, வெற்றி தோல்விகளை சமமாகக் கொண்டு கருமம் செய். நடுவு நிலை யோகம் என்று சொல்லப் படுகிறது(48)

சமபுத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல் புரிவது மிகக் கீழானதே. சமபுத்தியின்கண் சரணடைக. பயன் கருதுபவர் கயவர் ஆவர்(49)

மன நடுவு பெற்றவன் நன்மை தீமை இரண்டையும் இம்மையில் துறக்கிறான். ஆகையால் நீ யோகத்தைச் சார்ந்திடு.திறமையுடன் செயல் புரிதல் யோகம்.(50)

நடுவு நிற்கும் ஞானிகள் வினைப்பயனை விட்டொழித்து, பிறவித்தளை நீங்கி,கேடில்லாப் பெரு நிலை அடைகின்றனர்(51)

உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கைக் கடக்குமோ,அப்பொழுது கேட்டதிலும் கேட்கப் போவதிலும் பற்றின்மையைப் பெறுவாய். (52)

(பல்பொருள்) கேட்டுக்கலங்கும் உன் அறிவு ஆத்மாவின்கண் என்று அசையாது உறுதி பெறுமோ, அன்று நீ யோகம் அடைவாய்.(53)

அர்ஜுனன் சொன்னது

கேசவா, சமாதியில் நிலைத்த நிறை ஞானியின் லக்ஷணம் யாது? உறுதியான அறிவுடையவன் எதைப் பெறுகிறான், எப்படி அமர்கிறான் எவ்வாறு நடக்கிறான்(54)

பகவான் சொன்னது

பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளையெல்லாம் அகற்றிஆத்மாவில் ஆத்ம திருப்தி அடைந்திருப்பவன் ஸ்திதப் பிரக்ஞன் என்று சொல்லப் படுகிறான்.(55)

துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத பற்று, அச்சம் சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனி எனப்படுகிறான்(56)

எவன் எங்கும் பற்றிலனாய்நலம் தருவதை அடைந்து மகிழாதும்கேடு தருவதை அடைந்துநொந்து கொள்ளாமலுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெருகிறது.(57)

ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொள்வதுபோல பொருள்களிடமிருந்துபொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலை பெறுகிறது.(58)

இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்களில்லை ஆசையுண்டு பரமாத்மாவை தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது(59)

நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றி இழுக்கின்றன. (60)

யோக நிஷ்டன் அவைகளையெல்லாம் அடக்கி என்னைப் பரகதியாகக் கொண்டிருக்கிறான். இந்திரியங்களை வசமாக்கியவனுக்கு  அறிவு நிலை பெறுகிறது.(61)

பொருள்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது.பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது.ஆசை சினமாக வடிவெடுக்கிறது.(62)

சினத்தால் மனக் குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை,, நினைவு நாசத்தால் புத்தி நாசம், புத்திநாசத்தால் ஆள் அழிகிறான்(63)

விருப்பு வெறுப்பற்றனவும் ஆத்மவசப் பட்டனவும் ஆகிய இந்திரியங்களால் விஷயங்களில் உலவுகின்ற மனவேந்தன்  மனத் தெளிவடைகிறான்(64)

மனவமைதியில் மனிதனது துன்பங்கள் அனைத்தும் ஒழியும்.ஏனெனில் மன வமைதி உடையவனுக்கு அறிவு விரைவில் ஆத்ம சொரூபத்தில் நிலை பெறுகிறது(65)

மனமடங்காதவனுக்கு ஆத்ம போதமுமில்லை, ஆத்ம பாவனையுமில்லை. ஆத்ம தியானமில்லாதவனுக்கு சாந்தி கிடையாது. சாந்தி இல்லாதவனுக்கு இன்பமேது.?(66)

கப்பலைக் காற்றானது நீர்மேல் நிலைகுலைப்பது போன்று,அலைகின்ற இந்திரியங்களைப் பின் தொடரும் மனது அவனது விவேகத்தை அரிக்கிறது.(67)

ஆகையால் ஆற்றலுடையாய்,யாருடைய பொறிகள்புலன்களிருந்து பிரிக்கப்பட்டு இருக்கின்றனவோ அவனது அறிவு நிலை பெற்றுள்ளது(68)

உயிர்கள் அனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி விழித்திருக்கிறான் உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு(69)

அசைவற்ற நிறைகடலில் ஆறுகள் சென்றடங்குவதுபோல எம்முனிவன்பால் ஆசைகளனைத்தும் சென்று ஒடுங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான்.ஆசையுள்ளான் சாந்தியடையான்(70)

எப்புருஷன் ஆசைகளைஅறவே அகற்றி பற்றற்று அகங்கார மமகாரமின்றி நடமாடுகிறானோ அவன் சாந்தி அடைகிறான்(71)

பார்த்தா, இதுவே பிரம்ம நிலைப்பேறு ஆகும்.இதை அடைபவனுக்கு மோகமில்லை.இறுதி காலத்திலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(72)

                  ஸாங்கிய யோகம் நிறைவு 


G.M.Balasubramaniam Posts

கீதைப் பதிவு---அத்தியாயம் --1. அர்ஜுன விஷாத யோகம்

  

கீதைப் பதிவு---அத்தியாயம் --1. அர்ஜுன விஷாத யோகம்


மஹாபாரதமெனும் இதிகாசத்தில் பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் உள்ள 18 அத்தியாயங்களில் கூறப்பட்டவை ஸ்ரீமத் பகவத் கீதை எனப்படுகிறது.இவற்றில் அமைந்துள்ள சுலோகங்களின் எண்ணிக்கை எழுநூறு(என்று கூறப்படுகிறது. எண்ணிப் பார்க்கவில்லை)

குருக்ஷேத்திரப் போரில் நடப்பவற்றை நேரில் காணும் சக்தியை வியாச பகவான் ஸ்ஞ்ஜயனுக்கு( விருப்பு வெறுப்பு இல்லாதவன் எனும் பொருள்) அருளி இருந்தார். அவர் திருதராஷ்டிரனுக்கு நடப்பவற்றைக் கூறுவது போலும் அர்ஜுன ஸ்ரீகிருஷ்ண சம்பாஷ்ணைகளுமாக  கீதை விரிகிறது (பதிவின் நீளம் தவிர்க்க இயலாதது)

அத்தியாயங்களின் சுருக்கம்

1)       அர்ஜுனவிஷாத யோகம்46 சுலோகங்கள் கொண்டது

2)       ஸாங்கிய யோகம் –72 சுலோகங்கள்.

3)       கர்ம யோகம்---43சுலோகங்கள்

4)       ஞானகர்ம ஸன்யாஸ யோகம் –42 சுலோகங்கள்.

5)       ஸன்யாஸ யோகம்29 சுலோகங்கள்

6)       தியான யோகம்---47 சுலோகங்கள்

7)       ஞானவிக்ஞான யோகம்30 சுலோகங்கள்

8)       அக்ஷப்பிரம்ம யோகம்---28 சுலோகங்கள்

9)       ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்---34 சுலோகங்கள்

10)    விபூதி யோகம்42 சுலோகங்கள்

11)    விச்வரூபதர்சன யோகம்55 சுலோகங்கள்

12)    பக்தி யோகம்---20 சுலோகங்கள

13)    க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்34 சுலோகங்கள்

14)    குணத்ரய விபாக யோகம்---27 சுலோகங்கள்

15)    புருஷோத்தம யோகம் ---20 சுலோகங்கள்

16)    தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்24 சுலோகங்கள்

17)    சிரத்தாத்ரய விபாக யோகம்---28 சுலோகங்கள்

18)    மோக்ஷ ஸன்யாஸ யோகம் ---78 சுலோகங்கள்.


திருதராஷ்டிரர் சொன்னது

ஓ ஸஞ்ஜயா !தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்டநம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்.? (1)

ஸஞ்ஜயன் சொன்னது

அப்போது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும்( துரோண ) ஆச்சாரியாரை அணுகி( பின்வரும் ) வார்த்தையைச் சொல்லுவானாயினன் (2)

ஆச்சாரியாரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணி வகுக்கப் பட்டிருக்கும்  இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்(3)

இங்கே( பாண்டவப் படையில்) சூரர்களாகவும் ,பெரிய வில்லாளிகளாகவும் யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராட தேசத்து அரசனும் மகாரதனுமாகிய துருபத தேசத்து அரசனும், திருஷ்ட கேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசி ராஜனும், புருஜித் என்பவனும், குந்திபோஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமை உடைய உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடி இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர். (4-6 )

பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்து கொள்ளும்.என்னுடைய சேனையின் நாயகர்களைப் பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்கிறேன் (7)

தாங்களும்,பீஷ்மரும்,கர்ணனும், போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாச்சாரியாரும், அசுவத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.(8)

மேலும் எல்லோரும் என் பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாகவும்,பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும், யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர். (9)

பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவு கடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது. (10)

படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்று கொண்டு எல்லோரும் பீஷ்மரையே காப்பாற்றுக. (11)

வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் அவனுக்கு (துரியோதனனுக்கு) உற்சாகத்தை ஊட்ட உரக்கச் சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்.(12)

பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது. (13)

பிறகு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவரும் தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினார்கள். (14)

ஹிருஷிகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவ தத்தம் என்ற சங்கை நாதித்தான்.பெருவினையாற்றுபவனாகிய பீமசேனன் பௌண்டரம் என்ற பெரிய சங்கை ஊதினான்.(15)

குந்தியின் புதல்வன் ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.(16)

விற்படையில் தலை சிறந்த காசிராஜனும், மகாரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும் விராட தேசத்து அரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்(17)

மண்ணாள்பவனே,துருபதனும் த்ரௌபதியின் புதல்வர்களும், தோள் வலிவுடையவனாகிய சுபத்திரையின் மகனும்,ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்.(18)

மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய் திருதராஷ்டிரனின் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.(19)

அரசே.! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்கும் முன் வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான் (20)

அர்ஜுனன் சொன்னது

அச்யுதா ! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும் போரை விரும்பி முன் நிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன் (21,22)

புல்லறிவாளனாகிய துரியோதனனுக்குப் பிரீதி பண்ணும் பொருட்டு போர் புரிய இங்கு திரண்டிருப்போரை நான் காண வேண்டும் (23)

ஸஞ்ஜயன் சொன்னது

திருதராஷ்டிரரே,குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷிகேசர் இரண்டு சேனைகள் நடுவில் பீஷ்மர் துரோணாச்சாரியர்களுக்கு எதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி ”பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களைப் பார் என்று பகர்ந்தார். (24,25)

அங்கேஇரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும் ,ஆச்சாரியர்களையும், மாதுலரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும்,மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான் (26)

குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லோரையும் உற்றுப் பார்த்து பேரிரக்கம் படைத்தவனாய் இங்ஙனம் பகர்ந்தான். (27)

அர்ஜுனன் சொன்னது

கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன.வாயும் வறள்கிறது(28)

என் உடலில் நடுக்கமும் மெய்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது.மேலெல்லாம் தோலும் எரிகிறது(29)

கேசவா, என்னால் நிற்க இயலவில்லை.மனது சுழல்கிறது.கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன்(30)

கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை.வெற்றியையும், ராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் வேண்டவில்லை.(31)

கோவிந்தா, யாவர் பொருட்டு நாம் ராஜ்ஜியத்தையும் போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆசாரியர், தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர் மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர்.நமக்கு ராஜ்ஜியத்தால், போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன,?(32-34)

மதுசூதனா, நான் கொல்லப்படினும் மூவுலகை ஆள்வதற்கென்றும்  இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனா?(35)

ஜனார்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப் போகிறது?இந்த ஆததாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும்(36)

ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிரப் புத்திரர்களைக் கொல்லுதல் நமகுத் தகாது. மாதவா உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருபது எங்ஙனம்?(37)

ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும் மித்திர துரோகத்தால் விளையும் பாதகத்தையும், காண்கிலராயினும், குல நாசத்தால் உண்டாகும் கேட்டை, நன்கு உணர்ந்த நாம்.ஏன் ஜனார்த்தனா இப்பாபத்திலிருந்து பின் வாங்கத் தெரிந்து கொள்ளலாகாது?(38-39)

குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.(40)

அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழக்கும்போது வர்ணக் கலப்பு உண்டாகிறது.(41)

கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்(42)

குல நாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப் படும்.(43)

ஜனார்தனா, குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.(44)

அரச சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாவத்தைச் செய்யத் தலைப்பட்டோம் .அந்தோ.!(45)

எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலுமிருக்கிற என்னை கையில் ஆயுதம் பிடித்து திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்வார்களேயானால் அதுவே எனக்குப் பெரு நன்மையாகும்.(46)

ஸஞ்ஜயன் சொன்னது

இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்து விட்டு துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்(47)

          ( அர்ஜுன விஷாத யோகம் நிறைவு )         


G.M.Balasubramaniam Posts

3,6,9